புதன், 22 டிசம்பர், 2010

எடை மேடை

பண்டிகை நாள்களில்
பலகாரங்களை பரிமாறுகையில் அம்மா
இருப்பதில் பெரிய பங்கையும்
அவளது பங்கையும் சேர்த்தே 
எனது தட்டில் வைப்பாளேனினும்...

திருட்டு பார்வையோடு
தம்பியின் தட்டை தராசிலிடுகிற
சின்ன மனதுதான்
இன்றுவரையிலும்
ஏதோவொரு வகையில்...     

வியாழன், 25 நவம்பர், 2010

ஈர்க்குச்சி வாசம் ....

கூரையிலமர்ந்து
கரைந்துகொண்டிருக்கும் காகம்
நீ
விரட்டியடிக்க வீசியெறிந்த
துடைப்பத்திலிருந்து
ஒரு ஈர்க்குச்சியை
உருவி மறையும்

அது
கட்டி முடிக்கிற
கூடெங்கும் நிறைந்திருக்கும்
உன்
உள்ளங்கை வாசம்   

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஒரு ஆரிய தாலிக்கு , ஒரு இலட்சம் திராவிட தாலி !!!


1991-மே :   ராஜீவ் காந்தி படுகொலைக்கான முழு பழியையும் சுமந்து தேர்தலில்
                      மரண அடி வாங்கியது  தி .மு.க. இன்றைய அல்கொய்தா வை விட
                     கொடூரமானதாக அன்று  தி .மு.க. சித்தரிக்கப்பட்டது .வார மலர்
                     பத்திரிகையில் அந்துமணி எழுதினார் , "இனி தி.மு.க.வும் ,தி.க.வை
                    போல வெறும் ஒரு சமூக இயக்கமாக மட்டுமே இருக்கும் "...
  
         இருக்கட்டும் .......

இடை செருகல் :{ சோனியா காந்தி அடிப்படையில் கிறிஸ்தவர் என்று
                                     அறியப்படுவதால் இதை எழுத நேரிடுகிறது }
        
           "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு "என்றார்  'இயேசு' .
              அவருக்கும் முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 'பழைய விவிலியமோ'
             "பல்லுக்கு பல் ;கண்ணுக்கு கண் " என்கிறது .

             அதாவது ஒரு பல்லுக்கு ஒரு பல் தான் ;ஒரு கண்ணுக்கு ஒரு கண் தான் ...இரண்டு கூட இல்லை .

            விஷயத்திற்கு வருவோம் .......

2009-மே :          ஒரு தாலிக்காக ஒரு இலட்சம் தாலி அறுப்பேன்என்று                    சபதம் பூண்ட   ' மங்கம்மா' -சோனியா காந்தி -
          ஈழ தமிழினத்தையே வேரோடு கருவருத்தார் .

         அதற்கும் பழி சுமந்து நிற்பது தி.மு.க.வே தான் !!!

          தேவையா இந்த கூட்டணி ??????
         

வியாழன், 21 அக்டோபர், 2010

கண்ணகியும் - ஜெயலலிதாவும்


       "கண்ணகி நீதி கேட்ட இடத்தில் நீதி கேட்க வந்திருக்கிறேன் ".மதுரையில் நின்று கொண்டு இப்படி முழங்கியது யார்
 தெரியுமா ? 
வேறு யாருமல்ல ...சாட்சாத் ஜெய லலிதா தான் .
        இதே ஜெயலலிதா அவர்கள் தான் அவரது ஆட்சி காலத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் இருந்தா கண்ணகி சிலையை இடித்து பெயர்த்து ,சாக்கு மூட்டையில் கட்டி ,அருங் காட்சியகத்தின் கொடௌன் ற்குள் கடாசியவர். .
இதை தான் 'கால  கொடுமை 'என்றுசொல்வார்களோ.
அதற்காக சொல்லப்பட்ட காரணம் இன்னும் விநோதமானது .'
போக்குவரத்திற்கு இடைஞ்ச்சல் '.
      மெரினாவில் உழைப்பாளர் சிலை தொடங்கி காந்தி சிலை வரை வரிசையாக எண்ணற்ற தலைவர்களின் சிலைகள் இருக்கிறது .அன்று விசித்திரமாக கண்ணகி சிலை மட்டும் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஆக இருந்திருக்கிறது .
      கண்ணகி சிலை அகற்றபடுமுன்பு ஒரு லாரி வேறு வந்து மோதியது !அத்தனை சிலைகளையும் மீறி அந்த லாரிக்கு கண்ணகியின்
 கால் சிலம்பின் மீது அப்படி என்ன கோபமோ ?

ஆனால் உண்மையான காரணம் 'வாஸ்து தோஷம் '.
        மெரினாவில் வலது கையில் கால் சிலம்போடு  நின்று கொண்டிருந்த கண்ணகியின் இடது கை' போயஸ் கார்டனை '  சுட்டி கொண்டு நின்றதாம் .இத்தனைக்கும் மேரினாவிற்கும்  போயஸ் கார்டனுக்கும் ஐந்து கிலோ மீட்டர் தூரம்!!!
              வாஸ்த்து ,பூஜை புனஷ்காரம் ,ஜோசியம் ,இவைகள் தான் ஆட்சியை தீர்மானிக்கிறது என்றால் ,அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இவர் மட்டும் தானே ஆட்சி புரிந்திருக்க முடியும் ?
       எனக்கு தெரிந்து ஆட்சியை தீர்மானிப்பது 'வாக்கு சீட்டு 'கூட அல்ல .அரசை தீர்மானிப்பது 'மக்களின் மறதி ' தான்.
          அவர்கள் ஒரு ஆட்சியின் 'சாதகங்களை' அல்லது 'பாதகங்களை ' 
அல்லது வேறு எதற்காகவோ 'இரண்டையும்' சேர்த்து மறந்து விடுவதுதான் ஒரு அரசை தீர்மானிக்கிறது . 

புதன், 29 செப்டம்பர், 2010

பருவ மாற்றம்

முன்னம் நாளில்

பாறைகளை உருட்டி விளையாடிய

நதியின் தடத்தில்

நின்று கொண்டிருக்கிறேன் ...



இன்று

நகர முடியாமல் கிடக்கிறது

ஒரு இலை

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நெரிசல் மொட்டுகள்


 
போக்குவரத்து நெரிசலில் 
சிக்கிக்கொண்ட பேருந்திற்குள் 
பிதுங்கி தவிக்கையிலும் 
நசுங்காமல் பூக்கிறது 
நாளைய குறித்த கனவுகள் ...
      
        சாலையை கடக்கிரதொரு 
        சவ ஊர்வலம்      

திங்கள், 27 செப்டம்பர், 2010

நீந்தி ஏறுகிறது
நீர் மீது இலைகள் ...
அடி ஆழத்தில் நகைக்கும்
அடித்து செல்லும் நதி

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கள்ளகாதலும் - இந்திய சட்டமும்


நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் , அரபு நாடுகளிலும் ,மேலை நாடுகளிலும் 
கள்ள காதல் கொலைகள் அபூர்வம்  என்று ...[ ரொம்ப தேவைதான் ] 
யோசித்தபோது புரிந்தது ,
அரபுநாடுகளில் சட்டத்தின் கடுமையான தண்டனைக்கு பயப்படுகிறார்கள்.
மேலை நாடுகளில் சட்டம் சாமான்யனுக்கும் எட்டும் அளவு எளிதாக இருக்கிறது .
நாம்தான் இரண்டுக்கும் இடையில் அல்லாடுகிறோம் [ தமிங்க்லிஷ் மாதிரி ]
ஆமாம் ,இந்த இந்திய  திரு திரு திரு நாட்டில் சமீப காலங்களில் கள்ள காதலுக்காக ,
மனைவியர்களை கொன்ற கணவன்கள் அதிகமா ?
கணவன்களை கொன்ற மனைவியர்கள் அதிகமா?
[ இந்த கேள்விக்கு பதில் சொல்லாதவர்களின் தலை சுக்கு நுராக வெடிக்கக் கடவது ]      

மரண தண்டனையும் - மனித உரிமையும்...

தர்மபுரியில் முன்று மாணவிகளை உயிரோடு எரித்து கொன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் திரள்கிறார்கள் .


இந்த கொலைகார கும்பலுக்கு வேறு என்ன தண்டனை தான் கொடுப்பதாம் ??சிறை தண்டனையா ??ஹ ..ஹ் ..ஹ ..ஹா ..

வேணாம் விட்ருங்க அழுதிருவேன் .இந்தியா போன்ற ஊழல் மலிந்த நாட்டில் ,குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு மிகுந்த நாட்டில் சிறை தண்டனை என்பது கேலி கூத்து .

மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தை கொளுத்தி முன்று பேரை உயிரோடு கொளுத்தியவர்கள் இங்கேவீதிகளில்நெஞ்சுநிமிர்த்தி ,ஹாய்யாக கைவீசி நடந்துகொண்டிருக்கிறார்கள் அடுத்த வேட்டை தேடி....அதே நேரத்தில் புலிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக பேரறிவாளனுக்கு தூக்கு விதிக்கப்பட்டிருக்கிறது .

இங்கே பாதி குற்றவாளிகள் கொலை செய்தவுடன் நேராக செல்வது
காவல் நிலையங்களுக்குதான் . சரணடைந்து அப்படியே சிறைக்கு போய்விடலாம் .அதைவிட பாதுகாப்பு வேறு எங்கே இருக்கிறது ?!!

சினிமா பாணியில் போலீஸ் துரத்தி துரத்தி பிடித்தததாக மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வரும்..அது வேறு விஷயம் .

வெளியே இருந்தால் பாதிக்கப்பட்டவனின் மாமன் ,மச்சான் என்று கிளம்பி போட்டு தள்ளிவிட்டால் இந்தியாவிற்கு எவ்ளவு பெரிய இழப்பு ...

இங்கே குற்றவாளிகள் சிறைக்கு செல்வது பிக்னிக் போவதைப்போல ...சிறையில் அவர்களுக்கு பெண்ணை தவிர
[ அதையும் புதிய - இளம் குற்றவாளிகளிடம் அடைந்து விடுகிறார்கள் ] வேறு எல்லாமும் கிடைக்கிறது .சிறையில் இருந்தபடியே
அவர்களது செங்கோல் கோலோச்சுகிறது .

என்கௌன்டர் ,மரண தன்டனை இந்த இரண்டு மட்டுமே இப்போதைக்கு குற்றவாளிகளை அச்சுறுத்துகிற ஆயுதமாக இருக்கிறது .அதையும் வேண்டாம் என்று சொல்வது எனக்கு அபத்தமாகவே படுகிறது .

திங்கள், 10 மே, 2010

கரு மீன் குஞ்சு


காட்டாற்றை கடந்து போன
காட்டு யானை கூட்டத்தின்
கால்களுக்கு தப்பித்த
கரு மீன் குஞ்சு
கர்வம் பேசி இரையாகும்
கரையோர நாரையிடம்

திங்கள், 3 மே, 2010

வழக்கம்போல் நாளையும்

அடித்துப் பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பும்போது காlலை ஒன்பதரை ஆகிவிட்டது.வீடு என்றால் போர்டிஹோவும்,பெரிய ஹாலும் பால்கனியும் கொண்டதொன்றுமில்லை.


ஆயிரம்விளக்கு மக்கீஸ் கார்டனில் கூவம் தேம்ஸ்-க்கு பக்கத்தில்,ஒருஇரண்டு மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்- டோருக்கான அறையில் பரந்து கிடக்கிறது எனது சாம்ராஜ்யம்!

அங்கே கொஞ்சம்,இங்கே கொஞ்சம் என கடன் வாங்கி,ஏகப்பட்டஎதிர் பார்ப்புகளோடு அய்ம்பதாயிரம் முன்பணம் கொடுத்து,எழும்பூர் ஹால்ஸ் சாலையையை ஒட்டிய சந்தில்,எட்டுக்கு பத்து பரப்பளவிற்குள் ஒரு `ட்ராவல்ஸ்’ திறந்திருக்கிறேன்.அண்ணாசாலை டாராபூர் டவரை விலைக்கு வாங்கி ட்ராவல்ஸ் திறப்பதைப்போல எல்லா இரவுகளையும் கனவுகள் தின்கிறது!

காலையில் கண்விழித்து கதவு திறந்தால் அந்த சிவப்பு நிற சொறிநாய் எதிரிலிருக்கும் விளக்கு கம்பத்தில் காலை தூக்கிக்கொண்டு நிற்கும்! தினந்தோறும் அது திட்டமிட்டே எனது நாடி பிடித்து பார்க்கிறது.

எட்டு மணிக்கெல்லாம் ட்ராவல்ஸை திற்ந்துவிட வேண்டுமென்று காலையில் ஐந்து மணிக்கே எழும்பி பகீரத பிரயத்தனம் செய்தாலும், வீட்டைவிட்டு கிளம்பும்போதே ஒன்பதாகிவிடுகிறது.

கீழ்தளத்தில் அறைக்கு ஒன்றாய் ஏழு குடித்தனங்கள். நாடார்,நாயுடு,பாய், ரெட்டி,கூர்க்கா,மலையாளி என்று ஏழும் ஏழு விதம்-ஒட்டு போட்டு வைத்திருக்கும் இந்திய கந்தல் போல-பாசிட்டிவாய் யோசிப்பதாய் நினைத்து ’பாரத விலாஸ்’ என்று சொல்லி தயவு செய்து கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்

இரவு முழுவதும் லொடக்,லொடக் என்று தூக்கிப்போட்டு அடித்து தூங்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்.எப்படியோ கண்மூடி காலையில் எழும்பி தண்ணீர் பிடிக்க சென்றால்,அப்போதும் குழாயை சுற்றி குடித்தனங்கள் நெருக்கியடிக்கும்.இரவு முழுவதும் தண்ணீர் பிடித்திருந்தாலும் எனக்கு ஒரு வாளி தண்ணீருக்குகூட வழிவிடாமல் மறித்துக்கொண்டு நிற்பார்கள்

“ஆம்பளதானே…கொஞ்சம் பொறுப்பா”, என்று சொல்லிக்கொண்டு அந்த ரெட்டிப் பொம்பளை என்னை ஒரு தினுசாய் பார்க்கும்.நான் முறைக்கையில் முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு மாராப்பை சரிசெய்துகொள்ளும்.

`தினத்துக்கும் காலைல இதுகூட…’ மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு பார்வயை விலக்குவேன்.கடைசியில் யாராவது `பொழச்சுப் போ’,என்று வழிவிட்டால் உண்டு.

அத்தனை குடித்தனங்களுக்கும் சேர்த்து இரண்டு கழிப்பறை.ரேஷன் கடை க்யூவாய் கையில் வாளியோடு காத்து நின்று…மெல்ல மெல்ல முன்னேறி…கழிப்பறைக்குள் பதாகை பதிக்கும்வரை பொறுத்திருப்பவன் பாக்யவான்.அவனுக்கு சொர்க்கத்தில் சீட் கண்பார்ம்!

அவசர நிலை பிரகடனம் செய்யும்போது முன்னால் காத்து நிற்பவரை பிடித்துத்தள்ளிவிட்டு உள்ளே புகுந்து கொள்வதும் உண்டு.

வெளியிலிருந்து தகரக்கதவை டமால்,டுமீல் என்று எட்டி உதைப்பார்கள்.போர்களத்திற்குள் புகுந்த எருமையைப்போல் குந்தியிருக்க வேண்டும்.

சமயத்தில்,பாய் வீட்டு மூன்று வயது பையன் முன்னே சென்று,அங்கிங்கெனாதபடி எங்கெங்குமாய்,நீக்கமற நிறைந்து பிதுக்கி வைப்பதும் உண்டு.

ஒரே ஒரு குளியலறை.

இன்று முறைப்படி அடுத்த நபராய் குளிப்பதற்காக நான் காத்து நின்றேன்.கூர்க்காவின் பையனை குளிப்பாட்டிவிட்டு அவனது அம்மா வெளியே வர,பிடித்து வைத்திருந்த பக்கெட் தண்ணீரை எடுத்து வருவதற்குள்,பக்கத்து வீட்டு மலையாள அம்மாவின் பன்ரெண்டு வயது பெண் எனக்கு பெப்பே காட்டிவிட்டு சடக்கென்று குளியல றைக்குள் புகுந்துகொண்டது.

“ ஏய் குட்டி… நாந்தான் குளிக்கணும், வெளிய வாடி” உச்சஸ்தாதியில் கத்தினேன்.

“ எனிக்கு ஸ்கூலினு போணும்…ஞான் குளிச்சிட்டே வரும்” உள்ளே நின்றுகொண்டு அது சர்வ அலட்சியமாய் சொன்னது.

கெஞ்சினேன்.

உள்ளே தண்ணீர் மொண்டுவிடும் `சள்’ளென்ற சத்தமே பதிலாய் வந்தது-கூடவே ஒரு கெக்கே பிக்கேயும்.

”அங்க நின்னு வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிட்டிருக்காத…சீக்கிரம் வந்து வெளிய விழு”

”ஓ கொள்ளாம்…ஞான் பையத்தன்ன வரும்”

“பையத்தான் வருவியா? மவளே இங்கேர்ந்து ஒண்ணு விட்டா கோழிக்கோட்டில போய் விழுவ”

“ஷாம்பு எடுத்தில்லா…மம்மியோட சோதிச்சு வாங்ஙி தருமோ?”

எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.`என்னை பார்த்து இந்த சின்ன பெண்ணுக்குகூட எத்தனை இளக்காரம்?’

ஒரு வழியாய் குளித்து முடித்து ட்ராவல்ஸிற்கு வரும்போது மணி பத்தாகிவிட்டது.

கத்தரி வெயிலையே கருக்கும் எரிச்சலோடு அலுவலகத்திற்கு (ட்ராவல்ஸ்தான்) வந்தபோது ‘வழக்கம்போல’ அந்த ஆயா எனது கடைக்கு முன்னால் கடை விரித்திருந்தது!

கடையை ஒட்டிய முன்புற ப்ளாட்பார்மில் ஸ்டவ்,தோசைக்கல், இன்னொரு ஸ்டவ் மீது இட்லி குண்டான்,ஒரு பாத்திரத்தில் சாம்பார், சட்னி,இறைந்து கிடக்கும் எச்சில் தட்டுகள் என ஏகத்துக்கு அமர்க்களம்.

இரண்டு மூன்றுபேர் ஹாய்யாக கடையோடு சாய்ந்து நின்றுஇட்லி,தோசை என்று வெளுத்துக்கொண்டிருக்க…முன்புறம் முழுதும் எச்சில் பரவி…கை கழுவிய தண்ணீர் வடிந்துபோக இடமின்றி வழக்கம்போல் சகதியாகி சொத சொதவென்று கிடந்தது.

போதாததற்கு சின்ன பாத்திரங்கள்,மூடிகள்,கரண்டி,இத்யாதி என்று ஆயாவின் போர் உபகரணங்கள் எனது கடையின் மார்பில் சார்த்தப்பட்டிருந்தது.

தொலைவிலிருந்தே என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்ட ஆயாவின் இதழோரம் ஒரு அசால்ட் புன்னகை கீறி ஒளிந்தது.

பக்கத்தில் வந்ததும் என்னை பார்த்து சிரித்துக்கொண்டெ்டே கேட்டது,

“ வந்துட்டியா? “

எனக்குமட்டுமே தெரியும் இது எத்தனை டன் நக்கலான கேள்வியென்று.

‘ கிழவி என்னை என்னதான் நினைத்திருக்கிறது?’

இதன் இட்லி குண்டானையும் சாம்பாரையும் தூக்கி நடுச்சாலையில் வீச வேண்டும்.

“ ஏய் கெழவி…” உறுமினேன்.

“ இன்னா ?...ஷொல்லு “, கேட்டுக்கொண்டே தட்டை நீட்டிய ஒருவனுக்கு சாம்பார் ஊற்றியது.

“ நீ இட்லி விக்கிறதுக்கா நான் அம்பதாயிரம் அட்வான்ஸ் குடுத்து ட்ராவல்ஸ் தெறந்திருக்கேன் ?”

“ த, அந்தாண்ட கை கழுவு” ,என்னை பார்க்காமலே தனது கஸ்டமருக்கு ஆர்டர் போட்டது.

“ என்னை என்ன கோமாளிக் கூமுட்டைண்ணு நெனச்சிருக்கியா? நாலு பேரு வந்து போற கடை முன்னாடி எச்சியும் சகதியுமா நாஸ்தி பண்ற…உன்ன என்ன பண்றேம் பாரு…மொத இந்த கண்றாவிய எடுத்துத்தொலை” கடையில் சார்த்தியிருந்த உபகரணங்களை காட்டி பொருமினேன்.

எழும்பி வந்து தனது போர் கருவிகளை பொறுக்கிக்கொண்டே சொன்னது, “ தம்மத்தூண்டு கடையவச்சிக்னுரொம்பத்தான்துள்றியே…ட்ராவல்ஸாம்… ட்ராவல்ஸு”

“ என்னது? துள்றேனா?” ஆத்திரம் முட்ட திரும்பி கிழவியின் இட்லி குண்டானை தூக்கினேன்.

“ த,சொம்மா காரச்சட்னி,காரச்சட்னிண்ணிட்டு…தக்காளி இன்னா உங்க வூட்லேந்து லவட்டிக்னு வற்றேனா ?”

என்னை பொருட்படுத்தவே இல்லை .

வீசி எறிய மனம் வராமல், தூக்கிய இட்லி குண்டானை மறுபடியும் கீழேயே வைத்துவிட்டேன்.

என்னதான் முறைத்துக்கொண்டு சண்டையிட்டாலும் அதற்குத்தான் வெற்றி என்பது டக்வொர்த் லீவிஸ் விதி.முழுதாய் விற்று தீர்த்து கழுவிக் கவுக்கும்வரை அது இடம்விட்டு நகராது.

ட்ரைவ்இன்ஓட்டலில்காபரேபார்ப்பதுபோல்எங்கள்சண்டையை ரசித்துக்கொண்டமுன்னால்நின்றுசாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கத்தினேன் ,”போய்த் தொலைங்களேண்டா”

பக்கத்து கடைக்காரர்கள் இதை பொருட்படுத்துவதேயில்லை. தினசரி காலை காட்சியாய் ‘கிழவி சண்டை’ பார்த்து அவர்களுக்கு போரடித்துவிட்டது.கடையை திறந்து,பெருக்கி,சாமிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்தபின்,பாத்திரத்தையெல்லாம் கழுவி எதிர் பக்கத்து சேட் வீட்டு சுவரோரமாய் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு கையில் ஒரு ‘ஏர்மெயில்’ எடுத்துக்கொண்டு கிழவி என் கடை பார்த்து வந்தது.

“அட இன்னா கண்ணு ,இண்ணிக்கி ரெம்பவே சாமியாடிட்ட ?”,சின்ன சிரிப்போடு கடைக்குள் தலை நீட்டியது.

”கம்முண்ணு போயிரு” ,முணுமுணுத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்.

“ ஐய்ய…பச்ச இட்லில கரண்டியால குத்தினாப்ல மூஞ்சிய வச்சுக்னு…”,

அதனுடைய உவமையை கேட்டு சிரிப்பு முட்டி என் இறுக்கம் தளர, அது உரிமையோடு கடைக்குள் நுழைந்தது.

“ வீட்லேந்து எரிச்சல் மேல எரிச்சலோட இங்க வந்தா நீ வேற எண்ணமொண்டு ஊத்துற” ,அலுத்துக்கொண்டேன்

“ சரி, அத்த வுடு…கலர் தண்ணி எதுனா சாப்பிடுறியா ?” ,கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே தலை நீட்டி பக்கத்து கடையில் ‘ லிம்கா” சொன்னது.

“ உஞ் சங்காத்தமே வேணாம்”

“ காத்தால ஒரு மணி நேரம் அப்டி ஓரமா ஒக்காந்து பொழச்சுக்னு போறேன் … வுடுவியா” ,கடை பையன் லிம்கா கொண்டு வர,வாங்கி மேசையில் வைத்தது. “ எம் மக வயித்து பேரன் ரமேஸில்ல, போன வாரம் சிங்கப்பூர்லேந்து லட்டர் போட்ருந்திச்சே…நீதான படிச்சுக் காமிச்ச… அதுக்கொரு லட்டர் எழுதிக்குடேன்” ,ஏர் மெயிலை என்னிடம் நீட்டியது.

எனது எந்த ஆயுதமும்அதனிடம்செல்லுபடியாகப்போவதில்லை. குத்துமுன்னே கூர்மழுங்கி ’ணங்’ கென்று குப்புற விழும்.

ஒரு மிடறு லிம்கா குடித்துவிட்டு “ம்ஹூம்” என்று அதனிடமிருந்து ஏர்மெயிலை வாங்கினேன்.

“ இங்க நான் நல்லாக்றேன்” ,என்று அது சென்னை தமிழில் சொல்ல சொல்ல அதை செந்தமிழாக த்ருத்தி எழுதி … மடித்து ஒட்டி அதனிடம் கொடுத்தேன்.

இந்த அக்கரையும் ஆதங்கமும் நான் கடை மூடிம்வரை நீடிக்கும். சாயந்திரமானால் பஜ்ஜி வாங்கிக்கொண்டு வரும்…கடை முன்னால் பெருக்கி தண்ணீர் தெளிக்கும்…இரவு கிளம்பும்போது ‘ நல்லா தூங்கு கண்ணு’ ,என்று வழியனுப்பி வைக்கும்.

மற்றபடி ,

வழக்கம்போல் நாளையும் நான் எரிச்சலோடு வீட்டிலிருந்து கிளம்புவேன்… வழக்கம்போல் கிழவி கடைக்கு முன்னால் கடை விரித்து வைத்துவிட்டு, ‘வந்துட்டியா ?’ ,என்று நக்கலோடு கேட்கும்…வழக்கம்போல் எனக்கும் அதற்கும் நடுச்சாலையில் கலிங்க போர் நடக்கும்…

அதென்னவென்று தெரியவில்லை ,

கிழவியிடம் சண்டையிடாத ஒரு நாள் நிறைவான நாளாய் இருக்கும் என்று எனக்குப் படவில்லை.

ஞாயிறு, 2 மே, 2010

ஜன்னலில் சொட்டும் இரத்தம்


காகங்களால்
துரத்தப்பட்டு வந்த குயிலொன்று
என் வீட்டு ஜன்னலின்
இடைவெளி சிறுத்த கம்பிகளுக்கிடையில்
முட்டி மோதி படபடத்தது

நானும் துரத்தினேன்.

மறு நாள் விடியலில்
தெரு முனையில் கிடந்தது
கூரிய அலகுகளால்
கொத்தி கிழிக்கப்பட்ட உடல்

ஆண்டாண்டுகளாய்
ஜன்னல் கம்பியில்
துடி துடித்துக்கொண்டிருக்கிறது
அடிவயிற்று
மெல்லிறகு...

நள்ளிரவில்
சுவர் கீறிக் கசிகிறது
அதன் பாடல்

உதிர் காலம்


வண்டுகளின்
வண்ணத்து பூச்சிகளின்
உறிஞ்சு குழலுக்கு சிக்காத
அடித் தேனோடு
ஒவ்வொரு பூவும்
சருகாகிறது

புதன், 28 ஏப்ரல், 2010

கற்களின் நாயகி

என்னை ஞாபகமிருக்கிறதா?

கணவனை கொன்றதற்காக
கைது செய்யப்பட்ட
கள்ள காதலியின்
கழுத்தில் சுற்றி கிடந்த
பிஞ்சு பெண் நான்

காராக்கிரஹ இருளில்
அவள் ஒளிந்துகொண்டதால்
என் மீது திரும்பின
அவளுக்கான கற்கள்

பாவம் என்னுடையதல்ல...

உடலெங்கும் உதிரம் கொட்ட
மலங்க மலங்க முழித்து
நின்றுகொண்டிருந்தவள்
கற்களுக்கான காரணம் புரிந்தபின்
மார்பில் வகிடெடுத்து பிளந்து
உடலை ஒரு கூடையாக்கினேன்

கூடை நிரம்பியபின்
உதட்டுச்சாயம் பூசி
ஒப்பனையிட்டு கிளம்பினேன்
கற்களுக்கு சொந்தமான
 ஒவ்வொருவனோடும்
கூடிப்புணர

ஏனெனில் பாவம் அவர்களுடையதுமல்ல...

அனுபவித்த,அனுபவிக்க
வாய்ப்பேயிராத சுகம் ஈந்து
உடல் பிரிந்து
காறி உமிழ்கிறேன்

இந்த எச்சில்
என் காலடியில்
விந்து வடிய வீழ்ந்து கிடக்கிற
நாயின் முகத்திற்கல்ல

என் தாயின் யோனிக்கு...

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பால் வீதியிலொரு பட்டம்

வானில்
இருள் ஊறத்துவங்குகிற வேளையில்
பட்டங்கள்
தரையிறங்கிக்கொண்டிருக்கின்றன
இன்றைய பறத்தலின்
சுகத்தையும் வலியையும் ருசித்தபடி..

அறுபட்டவை
காற்றின் திசையில் மிதந்து
மரக்கிளைகளிலோ
மின்கம்பங்களிலோ
தொற்றி  சடசடக்கின்றன

ஏதோவொரு கரத்தால் விடுபட்டு
நாளையும் பறக்கலாமென்ற
காத்திருப்போடு சிலதும்
சாவின் அருகாமை உணர்ந்த
படபடப்போடு பலதும்

விரல்களால் ஆட்டுவிக்கப்படுகிற
விபரீதம் வெறுத்து
தன்னை தானே
அறுத்துக்கொண்ட ஒன்று
அண்டவெளியெங்கும் அலைகிறது
புகலிடமற்று

ஆதி தாரம்

அவள் மரித்து
வெகு காலமாயிற்று..

உண்மையில் அவளை
கொன்றவன் நான்தான்

பிறன் மனையோடு
முதல் புணர்ச்சியுற்ற நாளில்
தன்னுடலை தீயிலிட்டாள்

நிசப்தம் உறைந்த இருளில்
ஆழ்ந்த உறக்கத்தில்
மின்னல் புன்னகை கீறி ஒளிய
உடலதிர்ந்து விழிக்கிறேன்

இடி இடித்து
மெல்ல தூறி
கொட்டி சொரிந்து
பெருகிப் பெய்து
ஊழி மழையாய் அவளது
அடங்கா சிரிப்பு

திங்கள், 19 ஏப்ரல், 2010

தோள் நடுக்கம்

தோழமையின் வாசனையோடு
தோளில் விழுகிற கை
தன்னையறியாமலே சட்டை உரிக்கிறது

விரல்களில்
விஷப்பல் முளைக்கிறது
தன்னியக்கமாகவே

ஊர்ந்து மெல்லப்படர்ந்து
தோளை சுற்றி
படமெடுக்கும் வேளையில்
முதிர்ந்திருக்கும் விஷப்பை

பரிவும் பாசவுமாய்
பழகிப்போன
அம்மாவின் கையணைப்பில் கூட
தோள்கள் சிலிர்த்துக்கொள்கிறது

விழித்துக்கொண்ட எதன்பொருட்டோ
அஞ்சி நடுங்குகிறது

நானும் பழகிக்கொண்டிருக்கிறேன்
யார் தோளிலும்
கை போடாமலிருக்க

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

காமத்தாலானது உலகு

ஒவ்வொரு நாளும் புணர்ந்துகொண்டுதானிருக்கிறேன் - ஒரு பெண்ணோடு அல்லது மேலும் சிலரோடு.என்னோடு புணர்பவர்கள் அல்லது நான் பலவந்தப்படுத்தி புணர்பவர்கள் முன்னாள் காதலி,நடிகை,உறவு முறைக்குட்பட்டவர்கள், சிறு வயதிலிருந்தே தெரிந்தவர்கள்,இடைப்பட்ட காலத்தில் கடந்தவர்கள்,ஏன் -இப்பொதென்னை கடந்துபோனவர்களாகவும் இருக்கலாம் ( கொஞ்சம் அபாயகரமானதுதான் ).
       புணர்தல் நிகழுமிடம் எனது அறை,கழிப்பறை (?) வேலைக்கிடையில் கொஞ்சம் அயர்கிற இடம் எதுவாகவும் இருக்கலாம்.புணர்வு தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது மனதால் - உடலால் அல்ல. நான் கட்டை பிரம்மச்சாரியாக்கும் (?)
        இது கழிவிரக்கத்தை கோருவதற்காக எழுதப்படுவதுமல்ல.உங்கள் கழிவிரக்கத்தை போகிற போக்கில் இடது கையால் நீல் மெட்டல் பனால்காவில் தூக்கி போட்டுவிட்டு போங்கள்.
        ஒரு திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் ‘அண்ணே இதுதான் மேண்டிலா’ என்று கேட்டு பெட்றோமாக்ஸ் லைட்டை உடைப்பாரே,அதைப்போல இது ஏதோ எனக்கு மட்டுமே நேர்கிறதென்ற குற்றவுணர்ச்சியால் குறுகிப்போன கூமுட்டைத்தனத்தாலும் இதை எழுதவில்லை.
      “பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக” என்று பத்து கட்டளைகளில் ஒன்று சொல்கிறது ( அப்பவும் பிறர் புருசனைண்ணு சொல்லலியேப்பா )
      அவர்களுக்கென்ன...பத்திரிகை,தொலைக்காட்சி,சினிமா,செல்போண்,இணையம்,SEE THROW CLOTH,SIX PACK BODY ஏதுமில்லாத காலத்தில் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார்கள்.
                சரி விஷயத்துக்கு வருவோம்.
       ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ அல்லது ஆணும் ஆணுமோ,பெண்ணும் பெண்ணுமோ ( ஸ்ஸோஓ... ) மனதால் புணர்வது
                     குற்றமா ? குற்றமில்லையா ?

செவ்வாய், 2 மார்ச், 2010

நாக முத்து

நிலவு வழிகிற பனங்காட்டில்
நீயும் நானும்
கைகள் கோர்த்து காத்திருந்தோம்
முத்து உமிழ
ஊர்ந்து விரைகிற
நாகத்தின் மீது கண் வைத்து

அச்சம் துளிர்த்த நொடியில்
திடுமென்று வெட்டிப்பிரிந்து
வேறுதிசை நோக்கி ஓடினாய்
திரும்பியும் பாராமல்

விடியல் கசிந்தபின்
நிச்சயம் நீ
பனங்காட்டிற்கு சென்றிருப்பாய்
என்ன நேர்ந்ததென்பதை
உறுதிப்படுத்தவேண்டி...

உன்
உள்ளங்கை ரேகைகளின்
சுவடுகள் நெளிகிற
என் உள்ளங்கை மீது
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
நாகம் உமிழ்ந்த முத்து

செத்த பாம்பை புசிக்கவே
நீ
சபிக்கப்பட்டிருந்தாய்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

நிலமின்றி உழுபவன்

உழுதுகொண்டிருப்பதாக முரசடிக்கிறாய்

களஞ்சியம் கொள்ளாமல்
அறுவடை தானியங்களென்கிறாய்

ஈரம் இறங்காத
பாறை பெருவெளியில்
உன்
ஏருக்கு வேலையில்லையென்பதை
அறியா குழந்தையல்ல நான்

மகசூலில் தெறித்த
பதர் ஒன்றையாவது
பார்வைக்கு வீசு

என்னிடமும் உண்டு
ஒரு துண்டு நிலம்
அது
அத்தனை கடினமானதுமல்ல

வெள்ளி, 22 ஜனவரி, 2010

குருதி கசிவு

இரவுகளில் வந்து
உறவாடுகிறேனென்று
எனது
கல்லறையின் சிலுவையை
உடைத்தெறிந்து
மாந்ரீகரித்த கூர் நீள ஆணியை
நெஞ்சுக்கு நேராக
அடித்து இறக்குகிறார்கள்...

ஜன்னல் கதவுகளை
இறுக தாழிட்டு
இருண்ட தனியறைக்குள்
அடைந்து கிடக்கும்
உன்
நெற்றியிலும் மார்பிலும்
இரத்தம் துளிர்ப்பதை
இவர்கள்
அறியாதவர்களாயிருக்கிறார்கள்

வியாழன், 21 ஜனவரி, 2010

நாக்கு

வெப்பத்தின் உக்கிரத்தில்
கடல்கள்
கருகிய பின்னரே கருகியது
பூமியை புரட்டி
பாய்ந்துகொண்டிருந்த
எச்சில் நதி

விலக்கப்பட்ட கனிக்காக
முதல் பெண்ணான ஏவாளின்
உமிழ் நீர் சுரப்பிகளிருந்து
ஊற்றெடுத்து பெருகிய நதி

அழுகிக் குவிந்த
பிண மலைகளின் மீது
ஒற்றை போர்வையாய்
நீண்டு கிடக்கிறது
சர்ப்ப நாக்கு

சுவை உணர்ந்த நொடி முதல்
அசுர நீட்சியாய் நீண்டு
சுழலும் உருளையை
சுற்றி வளைத்த
நிறமற்ற நாக்கு

இனிப்பும்
கசப்பும்
புளிப்பும்
உவர்ப்புமான
ருசியின் வெறியில்
சுழன்று நக்கி
அலைந்து கொண்டிருந்தது அது

இன்னும் அதற்கு
கைகூடா கனவாகவே
கடவுளின் கை ருசி

புதன், 20 ஜனவரி, 2010

பிறவிப்பகை

இயல்புக்கு மீறி
மேல் அலகு நீண்டு வளைந்த
ஒற்றை காலொடிந்த
ஒரு காகம்
அடிக்கடி எதிர்ப்படுகிறது

நடைபாதை தேநீர்கடை
வேப்பமர கிளையிலிருந்து
முதல் முறை
உச்சந்தலையில் எச்சமிட்டு வைத்தது
மறு முறை
மிகச்சரியாக தேநீர் கோப்பைக்குள்

வழக்கமான டாஸ்மாக் கடையின்
ஆஸ்பெட்டாஸ் தடுப்பு மீது
என்னெதிரில் வந்தமர்ந்து
சிறகு குடைந்து கறுவுகிறது

தற்செயலென்றே எடுத்துக்கொள்கிறேன்...

அதன் பார்வையில் எப்போதும்
அச்சுறுத்துகிற
தீராத வன்மம்

பிரம்மையாகவே இருந்து தொலையட்டும்...

அது என்னை
வழி மறிக்கிறதா ?
நான் அதனை
பின் தொடர்கிறேனா ?

பொய் பல்

கழற்றி வைத்த
பொய்ப் பல்லை
கவ்விக்கொண்டு போனது காகம்...
வெளிப்பட்டது
ஒளித்து வைத்திருந்த
பேய்ச் சிரிப்பு.