சனி, 3 நவம்பர், 2012

இணைய புலிகளுக்கும் ; மைக் மாவீரர்களுக்கும்.. ...


       








     .'சோதியா படையணி'யின் முன்னணி தளபதி. ஈழத்து பெரும் சமர்களிலெல்லாம் முன் நின்றவர். ஜான்சி ராணிக்கு இணையாக ஈழமெங்கும் பேசப்பட்ட பெண் போராளி ...இன்று பாலியல் தொழிலாளி .[விகடனில் அவரது பேட்டியிலிருந்து ]
      
            உங்களிடம் கருணை தேடியோ , பரிதாபம் ஈனவோ நான் இங்கு பேசவில்லை ..என் கண் முன்னால் உடல் சிதறி இறந்து போன இரண்டு வயது தம்பிக்காக போராளி ஆன  நான் , எனது குழந்தைகளுக்காக பாலியல் தொழிலாளி ஆனேன் .
   
        "  இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காக போராடுவதாக சொல்லும் எந்த தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை . ' ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம் ' , என்கிற நிர்வாண கசப்பான உண்மையை கூட இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் .எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை  உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து             ' எப்போது உங்கள் அடுத்த போராட்டம் ? ' என்று கேட்டால் ,விளக்கு மாறால் அடிப்பேன் .                                                                                                                                                                                   இந்தியத் தலைவர்களே உங்களை கை கூப்பி தொழுகிறேன் ..எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது  நிறுத்துங்கள்.

புதன், 3 அக்டோபர், 2012

ஜெயமோகனின் அறத்தை குறித்து ...







              

             ஜெயமோகனின் 'அறம்' வம்சியின் ஆக சிறந்த வெளியீடுகளில் ஒன்று .நினைவின் புகை மண்டலத்தில் ஒரு புள்ளியாக கூட இல்லாமல் மறைந்து போன ' பூமேடை ' உயிர்த்தெழுந்து வந்தார் . எத்தனையோ சீட பெருமான்கள் மின்னி மறைந்து விட்ட பின்னும் குமரி மக்களின் மனதில் நீங்காது நிலைத்திருக்கும் 'நேசமணியோடு' கைகுலுக்க முடிந்தது . வாழ்வின் அடித்தட்டு அழுத்தத்தால் நிலைகுலைந்து மன மண்ணிற்குள் புதைந்து போன எண்ணற்ற மனித முகங்களை அகழ்ந்து அகழ்ந்து அறம் மீட்டெடுத்து தருகிறது  .                                                                                                                                                                                         உண்மையான மனிதர்களை பதிவு செய்யும்போது புனைவை புகுத்துவதும் , பால்ய வியப்போடு அவர்களை விவரிப்பதும் முறையா என்பதை                 ஜெய மோகன் தான் விளக்கவேண்டும் .' யானை டாக்டர் .கே' சொல்கிறார்  " மனிதனின் பூச்சி கொல்லியோடு போரிடுவது ஒரு பூச்சியல்ல . அது ஒரு பூச்சி பெரு வெளி . அது எத்தகைய பூச்சி கொல்லியை யும் வென்று மேலெழும்பும் ". அறமும் அதுவே. மனித பெருக்கு விடமாக அலை சுழற்றி , கரை புரண்டு பாய்ந்தாலும் 'அறம் ' நீந்தி மேலேறும் . சூரியனும் சுற்றி வரும் கோள்களும் ஒன்றோடொன்று உரசாமல் இயங்குவதும் அறமே .
                            அறம் அண்ட பெருவெளி .       

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இரத்த பேழை














அடர்ந்து  ஒளி புகா காட்டை
இரண்டாக பிளந்து மறு கரையின்றி
அலையடித்து பெருக்கெடுத்து பாய்கிறது
காட்டாறு
மத்தியில் நீந்தி செல்கிறது பேழை
இரத்த சிவப்பு
கரையில் நின்று கதற
கையெடுத்து கும்பிட
தவிர வேறென்ன செய்ய 

திங்கள், 28 நவம்பர், 2011

தண்டவாளத்து விழிகள்










 
பாழடைந்து கிடக்கிற
நிறுத்தமற்ற
இரயில் நிலையத்தில்
இற்று காலொடிந்த பின்னும்
யாருக்காகவோ காத்திருக்கிறது
ஒற்றை இருக்கை     

சனி, 26 நவம்பர், 2011

வெட்டுப்பட்ட ராணி




பணம் வந்த பாதையில் தேடினேன்
எங்கும் நீயில்லை
பணம் போன பாதையில் துழாவினேன்
அங்கும் நீயில்லை

சதியாட்டத்தால்
சதுரங்கத்தில் வெட்டுப்பட்ட
ராணி நீ

உன்னை சொல்லி குற்றமில்லை
பாஞ்சாலியிடம் கேட்டுவிட்டா
பணயம் வைத்தான் தர்மன்
சகுனியின் சபையில்

அதிர்ந்து பேச தெரியாத உன்னை
அரசியல் பூதம் விழுங்குவதை காண
இன்றிருந்திருந்தால் சுஜாதா
என்ன எழுதியிருப்பார்

போகட்டும் விடு
சிறையறை வாசம் இன்னுமொரு
கருவறை வாசமே  

திங்கள், 26 செப்டம்பர், 2011

அவள்-27









செத்துப்போன கரிய நதி ஒன்று
உறைந்துகிடக்கிறது என் வீட்டிற்குள்
நதியை பின்தொடர்ந்து உட்புகுந்த
குயில்களும் புறாக்களும்
குருவிகளும் வண்ணத்து பூச்சிகளும்
எதையும் தராமல்
எதையும் பெறாமல்
பின்திரும்பி வெளியேறுகிறார்கள்
இலையோ பூவோ
செத்த நதியில் நீராடி வருகிற அது
அவளாக இருக்கலாம்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அவள்-26


 
 
 
 
 
 
 
 
 
 
 
முதன் முதலாய் 
பட்டு பாவாடை கட்டிக்கொண்ட 
வெட்கத்தில் 
பனை மரத்திற்கு பின் 
மறைந்துகொண்ட அதே அவள்தான் 
ஜீன்ஸ் போட்டுக்கொண்டதற்காக
நகர சாலை ஓரத்தில் 
நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பின்
மறைந்துகொள்கிறாள்
பெயர்கள்தான் வேறு வேறு