திங்கள், 28 நவம்பர், 2011

தண்டவாளத்து விழிகள்










 
பாழடைந்து கிடக்கிற
நிறுத்தமற்ற
இரயில் நிலையத்தில்
இற்று காலொடிந்த பின்னும்
யாருக்காகவோ காத்திருக்கிறது
ஒற்றை இருக்கை     

சனி, 26 நவம்பர், 2011

வெட்டுப்பட்ட ராணி




பணம் வந்த பாதையில் தேடினேன்
எங்கும் நீயில்லை
பணம் போன பாதையில் துழாவினேன்
அங்கும் நீயில்லை

சதியாட்டத்தால்
சதுரங்கத்தில் வெட்டுப்பட்ட
ராணி நீ

உன்னை சொல்லி குற்றமில்லை
பாஞ்சாலியிடம் கேட்டுவிட்டா
பணயம் வைத்தான் தர்மன்
சகுனியின் சபையில்

அதிர்ந்து பேச தெரியாத உன்னை
அரசியல் பூதம் விழுங்குவதை காண
இன்றிருந்திருந்தால் சுஜாதா
என்ன எழுதியிருப்பார்

போகட்டும் விடு
சிறையறை வாசம் இன்னுமொரு
கருவறை வாசமே  

திங்கள், 26 செப்டம்பர், 2011

அவள்-27









செத்துப்போன கரிய நதி ஒன்று
உறைந்துகிடக்கிறது என் வீட்டிற்குள்
நதியை பின்தொடர்ந்து உட்புகுந்த
குயில்களும் புறாக்களும்
குருவிகளும் வண்ணத்து பூச்சிகளும்
எதையும் தராமல்
எதையும் பெறாமல்
பின்திரும்பி வெளியேறுகிறார்கள்
இலையோ பூவோ
செத்த நதியில் நீராடி வருகிற அது
அவளாக இருக்கலாம்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அவள்-26


 
 
 
 
 
 
 
 
 
 
 
முதன் முதலாய் 
பட்டு பாவாடை கட்டிக்கொண்ட 
வெட்கத்தில் 
பனை மரத்திற்கு பின் 
மறைந்துகொண்ட அதே அவள்தான் 
ஜீன்ஸ் போட்டுக்கொண்டதற்காக
நகர சாலை ஓரத்தில் 
நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு பின்
மறைந்துகொள்கிறாள்
பெயர்கள்தான் வேறு வேறு     

வியாழன், 15 செப்டம்பர், 2011

அவள்-25










அலைகள் சூழ்ந்து
தலை உடைத்து சிதறுகிற
பாறையின் உச்சியில்
நின்றுகொண்டிருந்தாள்

குதித்துவிடுவாளென்று
பதறிய கணத்தில்
நீந்த ஆரம்பித்தாள்
வளைந்தும் நெளிந்தும்
கடலின் இசைக்கு ஏற்ப

நடக்கவும் முடியாமல்
நீந்தவும் முடியாமல்
தத்தளிக்கிறேன் கரையில்

புதன், 17 ஆகஸ்ட், 2011

அவள்-24















நெய்யாற்றின் வாய் திறந்தால்
வடிகால்வழி வயிறு நிரம்பும்
எங்கள் குளம்

அகண்டு பரந்து
அலையடிக்கிற குளத்தின்
தெற்கு மூலையில்
அடர்ந்த கூந்தல் பறபறக்க
விறைத்த முலைகள் தெறிதெறிக்க
உதிர்ந்துதிரும் செண்பக மரத்தடியில்
உறைந்திருக்கிறாள் அவள்

குளமொட்டிய பாதையெங்கும்
இருள் விரிந்தபின் விரியுமவள்
பட்டு புடவை
கால்வாயில் கு்தித்தாடி
மின்ன மின்ன விளையாடும்

தீ விழிகள் 


துடிதுடிக்கிற செண்டை
துள்ளி சாகிற சேவல்
குருதி கொப்பளித்து கொம்படங்கும்
கிடாக்கள் போதாதென்று
கன்னி கர்ப்பிணி
வாலிபன் கிழவநென
அலகில் சிக்கியதையெல்லாம்
குளத்தோடு குடித்தாள்

நெய்யாற்று அணை மதகை
மலையாளத்தான் தாழிட
கால்வாய் சாலையானது
வறண்ட குளத்தில்
கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
எம் சிறார்கள்

அசையாதின்னும்
அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள் அவள்
யாருக்காகவென்று
யாருக்கு தெரியும்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அவள்-23












ஆப்ரிக்காகாரியாக இருந்திருந்தால்
தப்பித்திருப்பேன்
எண்கள் மண் மக்களை வஞ்சித்து
கட்டப்பட்ட கல்லூரி அது
வகுப்பறையில் களவு போன பணத்திற்கு
சக மாணவிகளின் பைகளோடு
தேடல் நிறுத்திய ஆசிரியைகள்
 என்னை மட்டும் அம்மணமாக்கி 
அடிவயிற்ரிர்கடியிலும் துழாவினார்கள்
துகிலோடு
உயிரும் உரிந்தார்கள் 
தமிழ் கறுப்பி ஆதலால்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

அவள்-22












அவள் இப்போதெல்லாம்
புட்டி பாலை தவறவிட்ட அப்பாவிற்கு
கன்னத்தில் அறை  வைக்கிறாள்
கீச் கீச்சென்று  ஊரை கூட்டுகிற
செருப்பணிந்து
குடியிருப்பை அதட்டுகிறாள்
நெஞ்சில் ஏறி மிதித்து
அட்டை கத்தியை
கழுத்தில் சொருகி கத்துகிறாள்
கீழ்ப்படிகிறாயா?இல்லையா ?
ஷாட்ஸ் போடாத தன வயது பையனை
கூனி குறுக்குகிறாள்  
ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட
மிதி வண்டியில் ஏறி உட்கார்ந்து
அவனை பின்புறத்திற்கு துரத்துகிறாள்
மாதவிடாய் காலத்தில்
கால் மேல் காலிட்டு எனது
கல்லாவில் உட்காருகிறாள்
துர் நாற்றத்துடன்
காமம்  பகிர வந்த கணவனை
கட்டிலிலிருந்து எட்டி உதைக்கிறாள்
தனது மறுமணத்தை
தானே கோருகிறாள்
ஊரிலிருந்து திரும்பும்போது
தன்னுடல் தளர்ந்திருக்கையிலும்
 என்னிடம் சில நோட்டுகளை திணித்து
வழியனுப்பி வைக்கிறாள்

அவள்-21













மரவள்ளி  தோட்டத்திற்கிடையே 
கிடக்கிறதந்த
பெரும் நீராழி
எப்போது போனாலும்
குளித்துக்கொண்டேயிருப்பாள்
மாமனை தொலைத்த அத்தையவள்
ஊறிப்பெருகும் அலைகள்
கரைகளை அடித்துடைக்கும்
 என்னை படிக்க சொல்லி 
எல்லாம் முடிந்து கரையேறுவாள்
மீந்த நுரைகள்
உடைந்து சிதறும்
சோறு பரிமாறும் அவள் விரல்களில்
உற்று பார்க்கிற என்னை
கை கழுவ துரத்தி
மரியா முன் நிறுத்துவாள்

அவள்-20















என்றும் மீளாத
அனந்த சயனத்திலிருக்கும்
பத்மநாப சுவாமியின் அணிகலன்களில்
பிறர் பார்வை விழுந்து தீட்டாயிற்று
அழியப்போகிறது நாடென்று
' தேவ பிரசன்னம் ' குறித்திருக்கிறீர்கள்
அரிவை தெரிவை பேதை பெதும்பை
மங்கை மடந்தை
பேரிளம்பெண் என
மொத்த எம் மூதாதையரின்
மேலாடை உரித்து
அத்தனை முலைகளையும்
உண்டு களித்த உங்களுக்காக
எப்போதோ தேவ பிரசன்னம்
பார்த்துவிட்டார்கள்
எப்போதும் விழித்திருக்கும்
எங்கள் அவள்கள்     

அவள்-19













முகமறியாத கணவனுக்காக
மனமறிந்து சிதையேறிய
ஒரு சிறுமியின் மண்டையோடு
என்னிடமிருக்கிறது
ஆன்மாவை யாரிடம் கொடுப்பதென்று
கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள்

எந்தவிதத்திலும்
பாத்தியமானவனில்லை நான்
உங்களில் யார்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அவள்-18












அப்பாவின் செருப்பு சத்தத்தால்
தனது புலம்பலை நிறுத்துபவள்
அவருக்குப்பின் எனது செருப்பிற்கு பயந்தாள்
காடு மேடு மரம் காற்று குளம்
கரிசட்டி
தம்பியின் கல்லறைஎன
இறைந்து கொண்டிருக்கிறது
அவள் புலம்பல்
அடிடாஸ் சூவோடு
வீடேறிக்கொண்டிருக்கிறான்
எனது மகன்

அவள்-17


















பெண்களெல்லாம் செத்தொழியுங்கள்
என்றான்  கடவுள்
 அவ்வண்ணமே ஆயிற்று
ஆண்கள் ஆண்களை புணர்ந்தார்கள்
பெண்களை மறுபடி தோற்றுவித்து
ஆண்களெல்லாம் செத்தொழியுங்கள் என்று
உத்தரவிட்டான் அவன்
அதுவும் அப்படியே ஆயிற்று
பெண்கள் பெண்களை புணர்ந்தார்கள்
கருமம் இருவருமே மொத்தமாக
செத்தொழியுங்கள் என்றான் அவன்
உலகம் சூன்யமாயி்ற்று
புதிய சந்ததி ஒன்றை படைப்பேன் என்று
சபதமிட்டவனிடம்
சாத்தான் கேட்டான்
பெண்ணின்றி ஏது?


கனிந்த கடவுள் சொன்னான்
கொஞ்ச நேரம் நான்
பெண்ணாகிவிடுகிறேன்
நீ ஆணாக இரு


பிறந்த குழந்தையின்
அடிவயிற்றுக்கு கீழே
ஒரு கொம்பு முளைத்திருந்தது
இருவருமே ஒப்புக்கொண்டார்கள்
அது ஆண் குறியென

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அவள்-16














ஏதேன் தோட்டத்தில்
ஏவாளின் நாக்கிலிருந்து
சுரக்கத் தொடங்கியது முதல் பாவம்
விலக்கப்பட்ட கனியை
உண்ணசொன்ன சர்ப்பம்
ஆணா? பெண்ணா ?   

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அவள்-15













ஒற்றை பூவையேனும் கொண்டிராத ஆடை 


 என்னிடம் ஒன்று கூட இல்லை

இருப்பினும்
எப்போதும் மூளியாகவே இருக்கிற
என் கூந்தல் அலசி
வேஷக்காரி என
முடிவுகட்டி வைத்திருக்கிறாய்

திருமண சடங்கில் தலை காட்ட தவறி
வீட்டிற்கு வந்த வெளியூர் நண்பர்களுக்கு
விருந்து  படைக்க
எனது சேவலை என்னெதிரில் 
கதற கதற
கழுத்து முறித்தவன் நீ

சூடிக்கொள்ளவென்று
ஒரு பூவை
அதன் காம்போடு கிள்ளுகையில்
தைக்கிற  வலியை
உன்னிடம் என்னவென்று பகிர்வது                                                                                   

அவள்-14












ஊரைவிட்டு தள்ளிய
மலையடிவாரத்தில்

கல்தூண்கள் உடைந்து நொறுங்கி
கூரை மீது மண்மூடி
கோயிலா சத்திரமா என
 இனம் புரியாத ஒன்றிற்கு பின்தான்
அவன் நிகழ்த்திக்கொண்டிருந்தான் அதை
துள்ள துடிக்க ஆடைகளின்றி
மயங்கி சரிந்திருந்தாள் ஒரு பெண்

உட்பிரகாரத்திற்குள்
உடைந்து நொறுங்கி கிடக்கும் 
அவளது கண்களில் அசைவு தெரிகிறது  

அவள்-13













அத்தனை கீழானவன் அவன்

உள்நாட்டில் அரங்கேற்றிய
கொடூரங்கள் போதாதென்று
அயல் நாட்டிலும் தொடர்ந்தான்
வளைகுடா பகுதி நாட்டில்
கழுவேற்றப்படுமுன் கேட்டார்கள் 
' கடைசி ஆசை என்ன?'
'அம்மா' என்றான்
மொழி புரியாவிட்டாலும் 
பொருள் புரிந்தது அவர்களுக்கு  

அவள்--12














ஆசைப்பட்டதால்
மூக்கறுபட்டாள் ஒருத்தி 
ஆசை கணவனுக்காக
முலையரிந்தாள்   ஒருத்தி
காலடியில் கிடந்தவனால்
முடி துறந்தாள் ஒருத்தி
கணவனென்று நம்பி
கல்லானாள் ஒருத்தி
சிறைவாசம் முடிந்தும்
சிதை புகுந்தாள் ஒருத்தி
ஆண்டவர்கள் திரண்ட சபையில்
 அம்மமாக்கப்பட்டாள் ஒருத்தி
நள்ளிரவில் துறந்தவனுக்காக
நாளெல்லாம் காத்திருந்தாள் ஒருத்தி   
...............................அவள்கள் எப்போதும்
அவள்களாகவே  

அவள்--11
















பேருந்தின் சன்னலோர என் இருக்கையின்
பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள்
வேறு இருக்கை இல்லாததால்
நடத்துனர் சீட்டு கொடுத்தபின்
அணைக்கப்பட்டது விளக்குகள்

முன்னிருக்கையில் தலை சாய்த்து அவள்
அயர்ந்து தூங்க துவங்க
நீள தொடங்கிய என் விரல்களை
 தட்டிவிட்டுக்கொன்டிருந்தவள்
துணிந்து முலை பற்றியபோது
தூக்கம் கலைந்து வெடித்தாள்
சர்வமும் ஒடுங்கி சன்னலில் வெறிப்பதாய்
வேடிக்கை காட்டினேன்
'என்னாச்சும்மா? ' பதறிய நடத்துனருக்கு
வயித்த கலக்குதென்றாள்

எதிர்பட்ட உணவு விடுதியில் வண்டி நிறுத்தப்பட
இறங்கி நடந்தாள்
நான் இறங்கவில்லை

திரும்பி வந்து புட்டியை நீட்டி
' தண்ணி குடிங்க ' என்றாள்
வாங்கி குடித்துவிட்டு சொன்னேன்
' நீங்க இந்த பக்கம் உக்காருங்க
நான் அந்த பக்கம் உக்கார்றேன் '

பின் நீளவில்லை என் விரல்கள்
நான் அயர்ந்து தூங்க துவங்க
அவள் சன்னல் வழியாய் வெறிக்க தொடங்கினாள்   

சனி, 6 ஆகஸ்ட், 2011

அவள்-10













இன்றுவரை தெரியாது அவள் குழந்தைக்கு
யார் தகப்பன் என
அறியப்பட்டிருக்கிறோம்
யோசேப்பு அவள் கணவன் என
என்றும் நாம் நம்பப்போவதுமில்லை
வானிலிருந்து பரிசுத்த ஒளி
கருப்பைக்குள் விழுவதற்கான சாத்தியங்களை
பிறர் சிலுவையை தன் தோளில்  ஏற்றி  
சக மானுடனுக்காய் தன்னுயிர் ஈந்தவனை
ஈன்றவளாதலால் அவள்
என்றும் கருனையுள்ளவள்

அவள்-9














அவள் மரித்து வெகு காலமாயிற்று

உண்மையில் அவளை
கொன்றவன் நான் தான்
பிறன் மனையோடு
முதல் புனர்ச்சியுர்ற நாளில்
 தன்னுடலை தீயிலிட்டாள்

நிசப்தம் உறைந்த இருளில்
ஆழ்ந்த உறக்கத்தில்
மின்னல் புன்னகை கீறி ஒளிய
உடலதிர்ந்து விழிக்கிறேன்

இடி இடித்து
மெல்ல தூறி
கொட்டி சொரிந்து
பெருகிப் பெய்து
ஊழி மழையாய் அவளது
அடங்கா சிரிப்பு  



                                                                 நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து ....                                                                              

அவள்-8












தொலைபேசி உரையாடலில்
கலவியில் எது பிடிக்குமென்றால்
கட்டியணைத்தல் மட்டுமே என்றாள்
இந்தபடி அந்தபடிஎன்று 
பலபடிகள் ஏறிய பேச்சின் உச்சியில்
பெண்ணொன்று ஆணிரண்டை
துய்க்க வேண்டுமென்றாள் ஒருமுறை

குறிப்பிட்ட நாளில்
அவள் வீட்டிற்குள்
இருவராய் உள் நுழைந்தபோது
'நீ மட்டும் வா ' என்றாள்    

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அவள்-7













ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறாள்போல

நிறைய பைகள் வைத்திருந்தாள்
இரயில் நிறுத்தம் வருமுன்னே
என்னிடம் கோரினாள்
'கொஞ்சம் இறக்கி விட்ருங்க '

இறங்கி துழாவினால்
மேம்பாலம் தொலை தூரத்திலிருந்தது

'இப்டியே கடந்திடலாம் '
என்றவளாக சொல்லிக்கொண்டே
தண்டவாளத்தில் குதித்தாள்
தூக்கி கொடுத்த பைகளை அடுத்த
பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு
துள்ளி ஏறினாள்

தண்டவாளம் கடந்து நானும் ஏறியபின்
'வரட்டுமா ' எனறாள்

தயங்கி கேட்டேன்
'போன் நம்பர் என்ன ?'
எனது நம்பரை கேட்டு பதிவு செய்துவிட்டு
தனது நம்பரை தராமல்
'போங்க ' எனறாள்









அவள்-6














ஒரு தண்டித்தலுக்காக வரவழைக்கப்பட்டிருந்தாள்


தலைமை ஆசிரியனான எனக்கு முன்னால்
தொடை நடுங்க நின்றுகொண்டிருந்தாள்
அந்த எட்டாம் வகுப்பு மாணவி

பரிவாய் அருகிலமர்த்தி
தலை கோதி
சுற்று முற்றும் பார்த்தொரு முத்தம் வைத்து
கட்டியணைக்கும்போது சொன்னேன்
'நான் உனக்கு அப்பா மாதிரி '
 
நாவறண்டு குரல் சிதறி கேட்டாள்
'அப்பா இப்படியெல்லாம் நடப்பதில்லையே '

அவள்-5












எப்படியோ தப்பி
வவுனி காட்டிலிருந்து வந்திருந்தாள்
ஏங்கும் [ அல்லது அவ்வாறு நடிக்கும் ]
சொற்களால் கேட்டேன்
'ஈழம் இனி கனவுதானா ?'

உறைந்த கண்கள் உலர உலர
உரக்க சிரித்தாள்
ஆண்கள் ஆயுதங்கள்தான்
வெடித்து சிதறுவார்கள்
சுட்டு களைப்பார்கள்
ஒடுங்கி உறங்குவார்கள்
பெண்கள் இருக்கும்வரை
சுதந்திரமும் இருக்கும் எனறாள்

அவள் அடிவயிறு பெருத்திருந்தது

புதன், 3 ஆகஸ்ட், 2011

அவள்-4













பூப்போட்ட பிராக்கும்
குட்டை பாவாடையுமாய்
ஆரம்ப பள்ளியிலேயே தனித்து தெரிபவள்
இடை நிலை பள்ளியில்
மிடியும் டாப்பும்
உயர் நிலையில்
ஊரிலேயே முதல் பெண்ணாய்
ஜீன்சும் ஹைஹீல்சும்
மேல்நிலையில் லோஹிப்
எவனுக்காகவும் காட்டுகிற மனோபாவமின்றி
பிடித்ததை அணிந்தாள் சர்வ அலட்சியமாக

ஆண்டுகள் கடந்தபின்
அங்காடி தெரு ஒன்றில் சந்தித்தேன்
முக்காடு போட்டிருந்தாள்

' ஒரு கணவனுக்காக மதம் மாறவேண்டியிருந்தது '
என்று மட்டும் சொன்னாள்

அவள்-3
















பெரும் துயரத்தை
பகிர்ந்துகொள்ள குழுமியிருந்தோம்
அதிகாலையில்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
பாலைகளிலிருந்து
உதிர்ந்து திரண்டுகொண்டிருந்தார்கள்
கவி சக்கரவர்த்திகள்

வெட்டிய வாழையாய்
கட்டிலில் வீழ்ந்து கிடக்கிறாள்
நண்பனின் மனைவி

அவள் எப்போதும் தன் கையால்
புன்னகை தம்ளரில் ஊர்றிக்கொடுக்கிற காபி
ஆவி பறந்துகொண்டிருந்தது ஆறாமல்

யாரும் பருகவில்லை

தலை வாழை இலையென தனையே விரித்து
குளிர் விழிகளால் அதட்டி பரிமாறும்
மதிய உணவும் அப்படியே இருந்தது

யாரும் உண்ணவில்லை

இருள் உறுமத்தொடங்கியபோது
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
ரகசியமாய்
மெல்ல குசுகுசுப்பு  அங்கலாய்ப்பு
பத்து மணி தான்டிவிடக்கூடாதென்கிற
பதை பதைப்பு
எட்டரைக்கு எல்லாம் முடிய
தலை தெறிக்க கூடினோம் டாஸ்மாக்கில்

'அவ கொஞ்சம் அப்டி தெரியுமா ?'
நான் முன்மொழிய
சிவா வழிமொழிய
கவ்தமன் தொடர்ந்தெழுத
மொகமத் உரைஎழுத
மது கிண்ணங்களில் அடித்து துவைத்து
அலசி பிழிந்தோம்
அவளது உள்ளாடைகளை

மறு நாளின் காலையில்
நண்பன் வீட்டு திண்ணையில்
யாரோ ஒரு முகமறியா சிறுமி பரிமாறிய
காபி பருகிக்கொண்டிருந்தபோது
குளித்து கொண்டையிடாத தலையுடன்
அவள் கோலமிட்டுக்கொண்டிருந்தாள்

நான் கவனிக்கவில்லை
அவளும் பொருட்படுத்தவில்லை 

அவள்-2













சோப்பு டப்பா துண்டு
எண்ணெய் வழிகிற தலையுடன்
குளத்திற்கு போகும்போது
பாதையோரத்து அவள் வீட்டு சன்னல்
தமிழ் புத்தக அளவிற்கு 
மெள்ள திறந்திருக்கும்
குதித்தும் தெறித்தும் பாய்ந்து்கொண்டிருக்கும்
ஒற்றை விழியொன்று

குளித்துத் திரும்புகையில்
சன்னல் இறுக மூடியிருக்க
உள்ளிருந்து கேட்கும்
உடைபடும் பாத்திரங்களின் ஒலி

அவள்-1













எனக்கு பிடித்த வாசனை
சந்தனமென்பதால்
எப்போதும் அவள்
'மைசூர் சான்டலில் '
குளித்துவிட்டுத்தான் வருகிறாள்
கடற்கரை
பூங்கா
தங்கும் விடுதி
கண்ட இடங்களிலும் நடக்கிறது கலவி

ஐம்புலன்களிலும்
டாஸ்மாக் வாசனை
வியர்வை வாசனை
கலந்து வழியத் திரிபவன் நான்

அவளுக்கு பிடித்த வாசனை என்னவென்று
நான் இதுவரை அவளிடம் கேட்டதில்லை
அவள் இதுவரை என்னிடம் சொன்னதுமில்லை 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

குறி


 
 
 
 
 
 
 
 
கத்தியை
எப்படி பிடிப்பதென்று
கற்று கொடுத்தவன் நான்  
அவனது குறி எப்போதும்
எனது  கழுத்தாகவே இருந்தது  

கூடற்றவன்








































 இளவேனில்காலம் .....

நகர பிரதான சாலையோரத்தின்
வழக்கமான டாஸ்மாக் கடை ....

எதிரிலிருக்கும் மின்கம்பத்தில்
சுற்றியிருக்கும் கம்பியை
வெறியோடு கொத்தி கொத்தி
முறிக்கிறது காகம் ........

இன்னும் ஒரு ஈர்க்குச்சியை கூட
பொறுக்கவில்லை நான்

வியாழன், 21 ஜூலை, 2011

குறுஞ் செய்தி மடல்












"என்ன சேதி ?"

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லாததற்கு ஏன் பதிலளிக்கிறாய் ?"

"ஒன்றுமில்லாத ஒன்றை குறித்து நீ ஏன்
கேள்வி எழுப்புகிறாய் ?"

"ஒன்றுமில்லாத ஒன்றிற்கு நீ பதிலளிக்கும்போது
ஒன்றுமில்லாத ஒன்றிற்கு நான் கேள்வி எழுப்பக்கூடாதா ?"

"அது சரி"

"வேறென்ன ?"

"ஒன்றுமில்லை ?"

"........................."

"என்ன மௌனம் ?" 

"ஒன்றுமில்லை என்பதை தவிர
வேறொன்றுமில்லை "