வெள்ளி, 22 ஜனவரி, 2010

குருதி கசிவு

இரவுகளில் வந்து
உறவாடுகிறேனென்று
எனது
கல்லறையின் சிலுவையை
உடைத்தெறிந்து
மாந்ரீகரித்த கூர் நீள ஆணியை
நெஞ்சுக்கு நேராக
அடித்து இறக்குகிறார்கள்...

ஜன்னல் கதவுகளை
இறுக தாழிட்டு
இருண்ட தனியறைக்குள்
அடைந்து கிடக்கும்
உன்
நெற்றியிலும் மார்பிலும்
இரத்தம் துளிர்ப்பதை
இவர்கள்
அறியாதவர்களாயிருக்கிறார்கள்

வியாழன், 21 ஜனவரி, 2010

நாக்கு

வெப்பத்தின் உக்கிரத்தில்
கடல்கள்
கருகிய பின்னரே கருகியது
பூமியை புரட்டி
பாய்ந்துகொண்டிருந்த
எச்சில் நதி

விலக்கப்பட்ட கனிக்காக
முதல் பெண்ணான ஏவாளின்
உமிழ் நீர் சுரப்பிகளிருந்து
ஊற்றெடுத்து பெருகிய நதி

அழுகிக் குவிந்த
பிண மலைகளின் மீது
ஒற்றை போர்வையாய்
நீண்டு கிடக்கிறது
சர்ப்ப நாக்கு

சுவை உணர்ந்த நொடி முதல்
அசுர நீட்சியாய் நீண்டு
சுழலும் உருளையை
சுற்றி வளைத்த
நிறமற்ற நாக்கு

இனிப்பும்
கசப்பும்
புளிப்பும்
உவர்ப்புமான
ருசியின் வெறியில்
சுழன்று நக்கி
அலைந்து கொண்டிருந்தது அது

இன்னும் அதற்கு
கைகூடா கனவாகவே
கடவுளின் கை ருசி

புதன், 20 ஜனவரி, 2010

பிறவிப்பகை

இயல்புக்கு மீறி
மேல் அலகு நீண்டு வளைந்த
ஒற்றை காலொடிந்த
ஒரு காகம்
அடிக்கடி எதிர்ப்படுகிறது

நடைபாதை தேநீர்கடை
வேப்பமர கிளையிலிருந்து
முதல் முறை
உச்சந்தலையில் எச்சமிட்டு வைத்தது
மறு முறை
மிகச்சரியாக தேநீர் கோப்பைக்குள்

வழக்கமான டாஸ்மாக் கடையின்
ஆஸ்பெட்டாஸ் தடுப்பு மீது
என்னெதிரில் வந்தமர்ந்து
சிறகு குடைந்து கறுவுகிறது

தற்செயலென்றே எடுத்துக்கொள்கிறேன்...

அதன் பார்வையில் எப்போதும்
அச்சுறுத்துகிற
தீராத வன்மம்

பிரம்மையாகவே இருந்து தொலையட்டும்...

அது என்னை
வழி மறிக்கிறதா ?
நான் அதனை
பின் தொடர்கிறேனா ?

பொய் பல்

கழற்றி வைத்த
பொய்ப் பல்லை
கவ்விக்கொண்டு போனது காகம்...
வெளிப்பட்டது
ஒளித்து வைத்திருந்த
பேய்ச் சிரிப்பு.