பெரும் துயரத்தை
பகிர்ந்துகொள்ள குழுமியிருந்தோம்
அதிகாலையில்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
பாலைகளிலிருந்து
உதிர்ந்து திரண்டுகொண்டிருந்தார்கள்
கவி சக்கரவர்த்திகள்
வெட்டிய வாழையாய்
கட்டிலில் வீழ்ந்து கிடக்கிறாள்
நண்பனின் மனைவி
அவள் எப்போதும் தன் கையால்
புன்னகை தம்ளரில் ஊர்றிக்கொடுக்கிற காபி
ஆவி பறந்துகொண்டிருந்தது ஆறாமல்
யாரும் பருகவில்லை
தலை வாழை இலையென தனையே விரித்து
குளிர் விழிகளால் அதட்டி பரிமாறும்
மதிய உணவும் அப்படியே இருந்தது
யாரும் உண்ணவில்லை
இருள் உறுமத்தொடங்கியபோது
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
ரகசியமாய்
மெல்ல குசுகுசுப்பு அங்கலாய்ப்பு
பத்து மணி தான்டிவிடக்கூடாதென்கிற
பதை பதைப்பு
எட்டரைக்கு எல்லாம் முடிய
தலை தெறிக்க கூடினோம் டாஸ்மாக்கில்
'அவ கொஞ்சம் அப்டி தெரியுமா ?'
நான் முன்மொழிய
சிவா வழிமொழிய
கவ்தமன் தொடர்ந்தெழுத
மொகமத் உரைஎழுத
மது கிண்ணங்களில் அடித்து துவைத்து
அலசி பிழிந்தோம்
அவளது உள்ளாடைகளை
மறு நாளின் காலையில்
நண்பன் வீட்டு திண்ணையில்
யாரோ ஒரு முகமறியா சிறுமி பரிமாறிய
காபி பருகிக்கொண்டிருந்தபோது
குளித்து கொண்டையிடாத தலையுடன்
அவள் கோலமிட்டுக்கொண்டிருந்தாள்
நான் கவனிக்கவில்லை
அவளும் பொருட்படுத்தவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக