அவள் இப்போதெல்லாம்
புட்டி பாலை தவறவிட்ட அப்பாவிற்கு
கன்னத்தில் அறை வைக்கிறாள்
கீச் கீச்சென்று ஊரை கூட்டுகிற
செருப்பணிந்து
குடியிருப்பை அதட்டுகிறாள்
நெஞ்சில் ஏறி மிதித்து
அட்டை கத்தியை
கழுத்தில் சொருகி கத்துகிறாள்
கீழ்ப்படிகிறாயா?இல்லையா ?
ஷாட்ஸ் போடாத தன வயது பையனை
கூனி குறுக்குகிறாள்
ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட
மிதி வண்டியில் ஏறி உட்கார்ந்து
அவனை பின்புறத்திற்கு துரத்துகிறாள்
மாதவிடாய் காலத்தில்
கால் மேல் காலிட்டு எனது
கல்லாவில் உட்காருகிறாள்
துர் நாற்றத்துடன்
காமம் பகிர வந்த கணவனை
கட்டிலிலிருந்து எட்டி உதைக்கிறாள்
தனது மறுமணத்தை
தானே கோருகிறாள்
ஊரிலிருந்து திரும்பும்போது
தன்னுடல் தளர்ந்திருக்கையிலும்
என்னிடம் சில நோட்டுகளை திணித்து
வழியனுப்பி வைக்கிறாள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக