நெய்யாற்றின் வாய் திறந்தால்
வடிகால்வழி வயிறு நிரம்பும்
எங்கள் குளம்அகண்டு பரந்து
அலையடிக்கிற குளத்தின்
தெற்கு மூலையில்
அடர்ந்த கூந்தல் பறபறக்க
விறைத்த முலைகள் தெறிதெறிக்க
உதிர்ந்துதிரும் செண்பக மரத்தடியில்
உறைந்திருக்கிறாள் அவள்
குளமொட்டிய பாதையெங்கும்
இருள் விரிந்தபின் விரியுமவள்
பட்டு புடவை
கால்வாயில் கு்தித்தாடி
மின்ன மின்ன விளையாடும்
தீ விழிகள்
துடிதுடிக்கிற செண்டை
துள்ளி சாகிற சேவல்
குருதி கொப்பளித்து கொம்படங்கும்
கிடாக்கள் போதாதென்று
கன்னி கர்ப்பிணி
வாலிபன் கிழவநென
அலகில் சிக்கியதையெல்லாம்
குளத்தோடு குடித்தாள்
நெய்யாற்று அணை மதகை
மலையாளத்தான் தாழிட
கால்வாய் சாலையானது
வறண்ட குளத்தில்
கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
எம் சிறார்கள்
அசையாதின்னும்
அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள் அவள்
யாருக்காகவென்று
யாருக்கு தெரியும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக