ஒற்றை பூவையேனும் கொண்டிராத ஆடை
என்னிடம் ஒன்று கூட இல்லை
இருப்பினும்
எப்போதும் மூளியாகவே இருக்கிற
என் கூந்தல் அலசி
வேஷக்காரி என
முடிவுகட்டி வைத்திருக்கிறாய்
திருமண சடங்கில் தலை காட்ட தவறி
வீட்டிற்கு வந்த வெளியூர் நண்பர்களுக்கு
விருந்து படைக்க
எனது சேவலை என்னெதிரில்
கதற கதற
கழுத்து முறித்தவன் நீ
சூடிக்கொள்ளவென்று
ஒரு பூவை
அதன் காம்போடு கிள்ளுகையில்
தைக்கிற வலியை
உன்னிடம் என்னவென்று பகிர்வது