திங்கள், 3 மே, 2010

வழக்கம்போல் நாளையும்

அடித்துப் பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பும்போது காlலை ஒன்பதரை ஆகிவிட்டது.வீடு என்றால் போர்டிஹோவும்,பெரிய ஹாலும் பால்கனியும் கொண்டதொன்றுமில்லை.


ஆயிரம்விளக்கு மக்கீஸ் கார்டனில் கூவம் தேம்ஸ்-க்கு பக்கத்தில்,ஒருஇரண்டு மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்- டோருக்கான அறையில் பரந்து கிடக்கிறது எனது சாம்ராஜ்யம்!

அங்கே கொஞ்சம்,இங்கே கொஞ்சம் என கடன் வாங்கி,ஏகப்பட்டஎதிர் பார்ப்புகளோடு அய்ம்பதாயிரம் முன்பணம் கொடுத்து,எழும்பூர் ஹால்ஸ் சாலையையை ஒட்டிய சந்தில்,எட்டுக்கு பத்து பரப்பளவிற்குள் ஒரு `ட்ராவல்ஸ்’ திறந்திருக்கிறேன்.அண்ணாசாலை டாராபூர் டவரை விலைக்கு வாங்கி ட்ராவல்ஸ் திறப்பதைப்போல எல்லா இரவுகளையும் கனவுகள் தின்கிறது!

காலையில் கண்விழித்து கதவு திறந்தால் அந்த சிவப்பு நிற சொறிநாய் எதிரிலிருக்கும் விளக்கு கம்பத்தில் காலை தூக்கிக்கொண்டு நிற்கும்! தினந்தோறும் அது திட்டமிட்டே எனது நாடி பிடித்து பார்க்கிறது.

எட்டு மணிக்கெல்லாம் ட்ராவல்ஸை திற்ந்துவிட வேண்டுமென்று காலையில் ஐந்து மணிக்கே எழும்பி பகீரத பிரயத்தனம் செய்தாலும், வீட்டைவிட்டு கிளம்பும்போதே ஒன்பதாகிவிடுகிறது.

கீழ்தளத்தில் அறைக்கு ஒன்றாய் ஏழு குடித்தனங்கள். நாடார்,நாயுடு,பாய், ரெட்டி,கூர்க்கா,மலையாளி என்று ஏழும் ஏழு விதம்-ஒட்டு போட்டு வைத்திருக்கும் இந்திய கந்தல் போல-பாசிட்டிவாய் யோசிப்பதாய் நினைத்து ’பாரத விலாஸ்’ என்று சொல்லி தயவு செய்து கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்

இரவு முழுவதும் லொடக்,லொடக் என்று தூக்கிப்போட்டு அடித்து தூங்கவிடாமல் செய்துவிடுகிறார்கள்.எப்படியோ கண்மூடி காலையில் எழும்பி தண்ணீர் பிடிக்க சென்றால்,அப்போதும் குழாயை சுற்றி குடித்தனங்கள் நெருக்கியடிக்கும்.இரவு முழுவதும் தண்ணீர் பிடித்திருந்தாலும் எனக்கு ஒரு வாளி தண்ணீருக்குகூட வழிவிடாமல் மறித்துக்கொண்டு நிற்பார்கள்

“ஆம்பளதானே…கொஞ்சம் பொறுப்பா”, என்று சொல்லிக்கொண்டு அந்த ரெட்டிப் பொம்பளை என்னை ஒரு தினுசாய் பார்க்கும்.நான் முறைக்கையில் முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு மாராப்பை சரிசெய்துகொள்ளும்.

`தினத்துக்கும் காலைல இதுகூட…’ மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு பார்வயை விலக்குவேன்.கடைசியில் யாராவது `பொழச்சுப் போ’,என்று வழிவிட்டால் உண்டு.

அத்தனை குடித்தனங்களுக்கும் சேர்த்து இரண்டு கழிப்பறை.ரேஷன் கடை க்யூவாய் கையில் வாளியோடு காத்து நின்று…மெல்ல மெல்ல முன்னேறி…கழிப்பறைக்குள் பதாகை பதிக்கும்வரை பொறுத்திருப்பவன் பாக்யவான்.அவனுக்கு சொர்க்கத்தில் சீட் கண்பார்ம்!

அவசர நிலை பிரகடனம் செய்யும்போது முன்னால் காத்து நிற்பவரை பிடித்துத்தள்ளிவிட்டு உள்ளே புகுந்து கொள்வதும் உண்டு.

வெளியிலிருந்து தகரக்கதவை டமால்,டுமீல் என்று எட்டி உதைப்பார்கள்.போர்களத்திற்குள் புகுந்த எருமையைப்போல் குந்தியிருக்க வேண்டும்.

சமயத்தில்,பாய் வீட்டு மூன்று வயது பையன் முன்னே சென்று,அங்கிங்கெனாதபடி எங்கெங்குமாய்,நீக்கமற நிறைந்து பிதுக்கி வைப்பதும் உண்டு.

ஒரே ஒரு குளியலறை.

இன்று முறைப்படி அடுத்த நபராய் குளிப்பதற்காக நான் காத்து நின்றேன்.கூர்க்காவின் பையனை குளிப்பாட்டிவிட்டு அவனது அம்மா வெளியே வர,பிடித்து வைத்திருந்த பக்கெட் தண்ணீரை எடுத்து வருவதற்குள்,பக்கத்து வீட்டு மலையாள அம்மாவின் பன்ரெண்டு வயது பெண் எனக்கு பெப்பே காட்டிவிட்டு சடக்கென்று குளியல றைக்குள் புகுந்துகொண்டது.

“ ஏய் குட்டி… நாந்தான் குளிக்கணும், வெளிய வாடி” உச்சஸ்தாதியில் கத்தினேன்.

“ எனிக்கு ஸ்கூலினு போணும்…ஞான் குளிச்சிட்டே வரும்” உள்ளே நின்றுகொண்டு அது சர்வ அலட்சியமாய் சொன்னது.

கெஞ்சினேன்.

உள்ளே தண்ணீர் மொண்டுவிடும் `சள்’ளென்ற சத்தமே பதிலாய் வந்தது-கூடவே ஒரு கெக்கே பிக்கேயும்.

”அங்க நின்னு வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிட்டிருக்காத…சீக்கிரம் வந்து வெளிய விழு”

”ஓ கொள்ளாம்…ஞான் பையத்தன்ன வரும்”

“பையத்தான் வருவியா? மவளே இங்கேர்ந்து ஒண்ணு விட்டா கோழிக்கோட்டில போய் விழுவ”

“ஷாம்பு எடுத்தில்லா…மம்மியோட சோதிச்சு வாங்ஙி தருமோ?”

எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.`என்னை பார்த்து இந்த சின்ன பெண்ணுக்குகூட எத்தனை இளக்காரம்?’

ஒரு வழியாய் குளித்து முடித்து ட்ராவல்ஸிற்கு வரும்போது மணி பத்தாகிவிட்டது.

கத்தரி வெயிலையே கருக்கும் எரிச்சலோடு அலுவலகத்திற்கு (ட்ராவல்ஸ்தான்) வந்தபோது ‘வழக்கம்போல’ அந்த ஆயா எனது கடைக்கு முன்னால் கடை விரித்திருந்தது!

கடையை ஒட்டிய முன்புற ப்ளாட்பார்மில் ஸ்டவ்,தோசைக்கல், இன்னொரு ஸ்டவ் மீது இட்லி குண்டான்,ஒரு பாத்திரத்தில் சாம்பார், சட்னி,இறைந்து கிடக்கும் எச்சில் தட்டுகள் என ஏகத்துக்கு அமர்க்களம்.

இரண்டு மூன்றுபேர் ஹாய்யாக கடையோடு சாய்ந்து நின்றுஇட்லி,தோசை என்று வெளுத்துக்கொண்டிருக்க…முன்புறம் முழுதும் எச்சில் பரவி…கை கழுவிய தண்ணீர் வடிந்துபோக இடமின்றி வழக்கம்போல் சகதியாகி சொத சொதவென்று கிடந்தது.

போதாததற்கு சின்ன பாத்திரங்கள்,மூடிகள்,கரண்டி,இத்யாதி என்று ஆயாவின் போர் உபகரணங்கள் எனது கடையின் மார்பில் சார்த்தப்பட்டிருந்தது.

தொலைவிலிருந்தே என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்ட ஆயாவின் இதழோரம் ஒரு அசால்ட் புன்னகை கீறி ஒளிந்தது.

பக்கத்தில் வந்ததும் என்னை பார்த்து சிரித்துக்கொண்டெ்டே கேட்டது,

“ வந்துட்டியா? “

எனக்குமட்டுமே தெரியும் இது எத்தனை டன் நக்கலான கேள்வியென்று.

‘ கிழவி என்னை என்னதான் நினைத்திருக்கிறது?’

இதன் இட்லி குண்டானையும் சாம்பாரையும் தூக்கி நடுச்சாலையில் வீச வேண்டும்.

“ ஏய் கெழவி…” உறுமினேன்.

“ இன்னா ?...ஷொல்லு “, கேட்டுக்கொண்டே தட்டை நீட்டிய ஒருவனுக்கு சாம்பார் ஊற்றியது.

“ நீ இட்லி விக்கிறதுக்கா நான் அம்பதாயிரம் அட்வான்ஸ் குடுத்து ட்ராவல்ஸ் தெறந்திருக்கேன் ?”

“ த, அந்தாண்ட கை கழுவு” ,என்னை பார்க்காமலே தனது கஸ்டமருக்கு ஆர்டர் போட்டது.

“ என்னை என்ன கோமாளிக் கூமுட்டைண்ணு நெனச்சிருக்கியா? நாலு பேரு வந்து போற கடை முன்னாடி எச்சியும் சகதியுமா நாஸ்தி பண்ற…உன்ன என்ன பண்றேம் பாரு…மொத இந்த கண்றாவிய எடுத்துத்தொலை” கடையில் சார்த்தியிருந்த உபகரணங்களை காட்டி பொருமினேன்.

எழும்பி வந்து தனது போர் கருவிகளை பொறுக்கிக்கொண்டே சொன்னது, “ தம்மத்தூண்டு கடையவச்சிக்னுரொம்பத்தான்துள்றியே…ட்ராவல்ஸாம்… ட்ராவல்ஸு”

“ என்னது? துள்றேனா?” ஆத்திரம் முட்ட திரும்பி கிழவியின் இட்லி குண்டானை தூக்கினேன்.

“ த,சொம்மா காரச்சட்னி,காரச்சட்னிண்ணிட்டு…தக்காளி இன்னா உங்க வூட்லேந்து லவட்டிக்னு வற்றேனா ?”

என்னை பொருட்படுத்தவே இல்லை .

வீசி எறிய மனம் வராமல், தூக்கிய இட்லி குண்டானை மறுபடியும் கீழேயே வைத்துவிட்டேன்.

என்னதான் முறைத்துக்கொண்டு சண்டையிட்டாலும் அதற்குத்தான் வெற்றி என்பது டக்வொர்த் லீவிஸ் விதி.முழுதாய் விற்று தீர்த்து கழுவிக் கவுக்கும்வரை அது இடம்விட்டு நகராது.

ட்ரைவ்இன்ஓட்டலில்காபரேபார்ப்பதுபோல்எங்கள்சண்டையை ரசித்துக்கொண்டமுன்னால்நின்றுசாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கத்தினேன் ,”போய்த் தொலைங்களேண்டா”

பக்கத்து கடைக்காரர்கள் இதை பொருட்படுத்துவதேயில்லை. தினசரி காலை காட்சியாய் ‘கிழவி சண்டை’ பார்த்து அவர்களுக்கு போரடித்துவிட்டது.கடையை திறந்து,பெருக்கி,சாமிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்தபின்,பாத்திரத்தையெல்லாம் கழுவி எதிர் பக்கத்து சேட் வீட்டு சுவரோரமாய் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு கையில் ஒரு ‘ஏர்மெயில்’ எடுத்துக்கொண்டு கிழவி என் கடை பார்த்து வந்தது.

“அட இன்னா கண்ணு ,இண்ணிக்கி ரெம்பவே சாமியாடிட்ட ?”,சின்ன சிரிப்போடு கடைக்குள் தலை நீட்டியது.

”கம்முண்ணு போயிரு” ,முணுமுணுத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்.

“ ஐய்ய…பச்ச இட்லில கரண்டியால குத்தினாப்ல மூஞ்சிய வச்சுக்னு…”,

அதனுடைய உவமையை கேட்டு சிரிப்பு முட்டி என் இறுக்கம் தளர, அது உரிமையோடு கடைக்குள் நுழைந்தது.

“ வீட்லேந்து எரிச்சல் மேல எரிச்சலோட இங்க வந்தா நீ வேற எண்ணமொண்டு ஊத்துற” ,அலுத்துக்கொண்டேன்

“ சரி, அத்த வுடு…கலர் தண்ணி எதுனா சாப்பிடுறியா ?” ,கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே தலை நீட்டி பக்கத்து கடையில் ‘ லிம்கா” சொன்னது.

“ உஞ் சங்காத்தமே வேணாம்”

“ காத்தால ஒரு மணி நேரம் அப்டி ஓரமா ஒக்காந்து பொழச்சுக்னு போறேன் … வுடுவியா” ,கடை பையன் லிம்கா கொண்டு வர,வாங்கி மேசையில் வைத்தது. “ எம் மக வயித்து பேரன் ரமேஸில்ல, போன வாரம் சிங்கப்பூர்லேந்து லட்டர் போட்ருந்திச்சே…நீதான படிச்சுக் காமிச்ச… அதுக்கொரு லட்டர் எழுதிக்குடேன்” ,ஏர் மெயிலை என்னிடம் நீட்டியது.

எனது எந்த ஆயுதமும்அதனிடம்செல்லுபடியாகப்போவதில்லை. குத்துமுன்னே கூர்மழுங்கி ’ணங்’ கென்று குப்புற விழும்.

ஒரு மிடறு லிம்கா குடித்துவிட்டு “ம்ஹூம்” என்று அதனிடமிருந்து ஏர்மெயிலை வாங்கினேன்.

“ இங்க நான் நல்லாக்றேன்” ,என்று அது சென்னை தமிழில் சொல்ல சொல்ல அதை செந்தமிழாக த்ருத்தி எழுதி … மடித்து ஒட்டி அதனிடம் கொடுத்தேன்.

இந்த அக்கரையும் ஆதங்கமும் நான் கடை மூடிம்வரை நீடிக்கும். சாயந்திரமானால் பஜ்ஜி வாங்கிக்கொண்டு வரும்…கடை முன்னால் பெருக்கி தண்ணீர் தெளிக்கும்…இரவு கிளம்பும்போது ‘ நல்லா தூங்கு கண்ணு’ ,என்று வழியனுப்பி வைக்கும்.

மற்றபடி ,

வழக்கம்போல் நாளையும் நான் எரிச்சலோடு வீட்டிலிருந்து கிளம்புவேன்… வழக்கம்போல் கிழவி கடைக்கு முன்னால் கடை விரித்து வைத்துவிட்டு, ‘வந்துட்டியா ?’ ,என்று நக்கலோடு கேட்கும்…வழக்கம்போல் எனக்கும் அதற்கும் நடுச்சாலையில் கலிங்க போர் நடக்கும்…

அதென்னவென்று தெரியவில்லை ,

கிழவியிடம் சண்டையிடாத ஒரு நாள் நிறைவான நாளாய் இருக்கும் என்று எனக்குப் படவில்லை.

2 கருத்துகள்:

INDIA 2121 சொன்னது…

PATHIVU MEKAVUM ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

Thangavel Manickadevar சொன்னது…

பின்னி மோசஸ் கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக