புதன், 28 ஏப்ரல், 2010

கற்களின் நாயகி

என்னை ஞாபகமிருக்கிறதா?

கணவனை கொன்றதற்காக
கைது செய்யப்பட்ட
கள்ள காதலியின்
கழுத்தில் சுற்றி கிடந்த
பிஞ்சு பெண் நான்

காராக்கிரஹ இருளில்
அவள் ஒளிந்துகொண்டதால்
என் மீது திரும்பின
அவளுக்கான கற்கள்

பாவம் என்னுடையதல்ல...

உடலெங்கும் உதிரம் கொட்ட
மலங்க மலங்க முழித்து
நின்றுகொண்டிருந்தவள்
கற்களுக்கான காரணம் புரிந்தபின்
மார்பில் வகிடெடுத்து பிளந்து
உடலை ஒரு கூடையாக்கினேன்

கூடை நிரம்பியபின்
உதட்டுச்சாயம் பூசி
ஒப்பனையிட்டு கிளம்பினேன்
கற்களுக்கு சொந்தமான
 ஒவ்வொருவனோடும்
கூடிப்புணர

ஏனெனில் பாவம் அவர்களுடையதுமல்ல...

அனுபவித்த,அனுபவிக்க
வாய்ப்பேயிராத சுகம் ஈந்து
உடல் பிரிந்து
காறி உமிழ்கிறேன்

இந்த எச்சில்
என் காலடியில்
விந்து வடிய வீழ்ந்து கிடக்கிற
நாயின் முகத்திற்கல்ல

என் தாயின் யோனிக்கு...

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பால் வீதியிலொரு பட்டம்

வானில்
இருள் ஊறத்துவங்குகிற வேளையில்
பட்டங்கள்
தரையிறங்கிக்கொண்டிருக்கின்றன
இன்றைய பறத்தலின்
சுகத்தையும் வலியையும் ருசித்தபடி..

அறுபட்டவை
காற்றின் திசையில் மிதந்து
மரக்கிளைகளிலோ
மின்கம்பங்களிலோ
தொற்றி  சடசடக்கின்றன

ஏதோவொரு கரத்தால் விடுபட்டு
நாளையும் பறக்கலாமென்ற
காத்திருப்போடு சிலதும்
சாவின் அருகாமை உணர்ந்த
படபடப்போடு பலதும்

விரல்களால் ஆட்டுவிக்கப்படுகிற
விபரீதம் வெறுத்து
தன்னை தானே
அறுத்துக்கொண்ட ஒன்று
அண்டவெளியெங்கும் அலைகிறது
புகலிடமற்று

ஆதி தாரம்

அவள் மரித்து
வெகு காலமாயிற்று..

உண்மையில் அவளை
கொன்றவன் நான்தான்

பிறன் மனையோடு
முதல் புணர்ச்சியுற்ற நாளில்
தன்னுடலை தீயிலிட்டாள்

நிசப்தம் உறைந்த இருளில்
ஆழ்ந்த உறக்கத்தில்
மின்னல் புன்னகை கீறி ஒளிய
உடலதிர்ந்து விழிக்கிறேன்

இடி இடித்து
மெல்ல தூறி
கொட்டி சொரிந்து
பெருகிப் பெய்து
ஊழி மழையாய் அவளது
அடங்கா சிரிப்பு

திங்கள், 19 ஏப்ரல், 2010

தோள் நடுக்கம்

தோழமையின் வாசனையோடு
தோளில் விழுகிற கை
தன்னையறியாமலே சட்டை உரிக்கிறது

விரல்களில்
விஷப்பல் முளைக்கிறது
தன்னியக்கமாகவே

ஊர்ந்து மெல்லப்படர்ந்து
தோளை சுற்றி
படமெடுக்கும் வேளையில்
முதிர்ந்திருக்கும் விஷப்பை

பரிவும் பாசவுமாய்
பழகிப்போன
அம்மாவின் கையணைப்பில் கூட
தோள்கள் சிலிர்த்துக்கொள்கிறது

விழித்துக்கொண்ட எதன்பொருட்டோ
அஞ்சி நடுங்குகிறது

நானும் பழகிக்கொண்டிருக்கிறேன்
யார் தோளிலும்
கை போடாமலிருக்க

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

காமத்தாலானது உலகு

ஒவ்வொரு நாளும் புணர்ந்துகொண்டுதானிருக்கிறேன் - ஒரு பெண்ணோடு அல்லது மேலும் சிலரோடு.என்னோடு புணர்பவர்கள் அல்லது நான் பலவந்தப்படுத்தி புணர்பவர்கள் முன்னாள் காதலி,நடிகை,உறவு முறைக்குட்பட்டவர்கள், சிறு வயதிலிருந்தே தெரிந்தவர்கள்,இடைப்பட்ட காலத்தில் கடந்தவர்கள்,ஏன் -இப்பொதென்னை கடந்துபோனவர்களாகவும் இருக்கலாம் ( கொஞ்சம் அபாயகரமானதுதான் ).
       புணர்தல் நிகழுமிடம் எனது அறை,கழிப்பறை (?) வேலைக்கிடையில் கொஞ்சம் அயர்கிற இடம் எதுவாகவும் இருக்கலாம்.புணர்வு தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது மனதால் - உடலால் அல்ல. நான் கட்டை பிரம்மச்சாரியாக்கும் (?)
        இது கழிவிரக்கத்தை கோருவதற்காக எழுதப்படுவதுமல்ல.உங்கள் கழிவிரக்கத்தை போகிற போக்கில் இடது கையால் நீல் மெட்டல் பனால்காவில் தூக்கி போட்டுவிட்டு போங்கள்.
        ஒரு திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் ‘அண்ணே இதுதான் மேண்டிலா’ என்று கேட்டு பெட்றோமாக்ஸ் லைட்டை உடைப்பாரே,அதைப்போல இது ஏதோ எனக்கு மட்டுமே நேர்கிறதென்ற குற்றவுணர்ச்சியால் குறுகிப்போன கூமுட்டைத்தனத்தாலும் இதை எழுதவில்லை.
      “பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக” என்று பத்து கட்டளைகளில் ஒன்று சொல்கிறது ( அப்பவும் பிறர் புருசனைண்ணு சொல்லலியேப்பா )
      அவர்களுக்கென்ன...பத்திரிகை,தொலைக்காட்சி,சினிமா,செல்போண்,இணையம்,SEE THROW CLOTH,SIX PACK BODY ஏதுமில்லாத காலத்தில் எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டார்கள்.
                சரி விஷயத்துக்கு வருவோம்.
       ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ அல்லது ஆணும் ஆணுமோ,பெண்ணும் பெண்ணுமோ ( ஸ்ஸோஓ... ) மனதால் புணர்வது
                     குற்றமா ? குற்றமில்லையா ?