செவ்வாய், 2 மார்ச், 2010

நாக முத்து

நிலவு வழிகிற பனங்காட்டில்
நீயும் நானும்
கைகள் கோர்த்து காத்திருந்தோம்
முத்து உமிழ
ஊர்ந்து விரைகிற
நாகத்தின் மீது கண் வைத்து

அச்சம் துளிர்த்த நொடியில்
திடுமென்று வெட்டிப்பிரிந்து
வேறுதிசை நோக்கி ஓடினாய்
திரும்பியும் பாராமல்

விடியல் கசிந்தபின்
நிச்சயம் நீ
பனங்காட்டிற்கு சென்றிருப்பாய்
என்ன நேர்ந்ததென்பதை
உறுதிப்படுத்தவேண்டி...

உன்
உள்ளங்கை ரேகைகளின்
சுவடுகள் நெளிகிற
என் உள்ளங்கை மீது
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
நாகம் உமிழ்ந்த முத்து

செத்த பாம்பை புசிக்கவே
நீ
சபிக்கப்பட்டிருந்தாய்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக